ராயக்கோட்டை அருகே நகைக்காக கழுத்தை இறுக்கி பெண் கொலை
- பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள ஜிஞ்சேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது50). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பாப்பம்மா (45). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் பாப்பம்மா ஆடுகளை தினமும் காலை 7 மணிக்கு காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்.
நேற்றும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் அவர் அழைத்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இன்றுகாலை பெரியஏரி காட்டுப்பகுதியில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதனால் மர்ம நபர்கள் நகைக்காக பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.