உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே மகள் காதல் திருமணத்தால் பெண் தற்கொலை

Published On 2023-06-29 14:14 IST   |   Update On 2023-06-29 14:14:00 IST
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுமதி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்,

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (42). இவரும் அதே பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

முருகேஷ்- சுமதி தம்பதிக்கு மகள் பிரியா (வயது 21) உள்ளார். இவர் அவிநாசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்தார். இதற்கு பிரியா வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.

இந்த நிலையில் பிரியா கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். எனவே அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். வீட்டில் இருந்து மாயமான பிரியா, சரவணனுடன் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இது சுமதியை வேதனைக்கு உள்ளாக்கியது. ஆசை ஆசையாய் வளர்த்த மகள் பெற்றோரின் பேச்சை கேளாமல், இப்படி காதல் திருமணம் செய்து கொண்டாளே? என்று அக்கம் பக்கத்தினரிடம் அவர் புலம்பி வந்து உள்ளார்.

எனவே சூலூர் செங்கத்துறையில் வசிக்கும் சகோதரி ராணி என்பவர், தங்கையை தேற்றுவதற்காக தனது வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளார். அங்கும் சுமதி தீராத மனஉளைச்சலில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் சுமதி நேற்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுமதி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிங்கா நல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News