உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள கலெக்டர் உத்தரவு

Published On 2022-08-18 08:42 GMT   |   Update On 2022-08-18 08:42 GMT
  • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலிடம் பெற்றுள்ள விபரங்களை உறுதி செய்வதற்காகவும் ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துகொள்ளலாம்.

மேலும் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளிக்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், இந்திய கடவுச்சீட்டு, வங்கி அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கபட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01 ஆம் தேதியை தகுதியான நாளாக கொண்டு புதிய மற்றும் இளம் வாக்காளர் சேர்க்கையினை நடத்தி வருகிறது. இதனால் ஜனவரி 01-ம் தேதிக்கு பின்னர் 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை காத்து இருந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வந்தனர். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜுலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய4 தகுதி தேதிகளை அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே மேற்படி தகுதி நாட்களில் 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது

Tags:    

Similar News