உள்ளூர் செய்திகள்

சி.ஆர்.பி.எப் மையத்தில் பெண் அதிகாரியை தாக்கிய காட்டு யானை

Published On 2022-11-17 15:07 IST   |   Update On 2022-11-17 15:07:00 IST
  • 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
  • வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன் பாளையம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. அங்கு மத்திய ரிசர்வு போலீஸ் பயிற்சி மையம் (சி.ஆர்.பி.எப்) செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி பள்ளியில் அதிகாரியாக நெல்லையை சேர்ந்த ராதிகா மோகன் (56) என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வேலையை முடித்து வீட்டு மற்றொரு பெண் அதிகாரியுடன் வளாகத்தில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது வளாகத்தில் உள்ள உடைந்த மதில் சுவர் வழியாக ஒற்றை காட்டு யானை உள்ளே புகுந்தது. இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை பார்த்த யானை அவர்களை துரத்தியது.

ராதிகா மோகன் அருகில் வந்த யானை அவரை லேசாக தட்டி அங்கிருந்து சென்றது. இதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

பின்னர் பலத்த காயம் அடைந்த அதிகாரி ராதிகா மோகனை மீட்டு வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் இருந்து யானையை வெளிேய விரட்டினர். இந்த நிலையில் கதிர்நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒரு ேதாட்டத்தில் ஒற்றை காட்டுயானை புகுந்து உலாவுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.சி.ஆர்.பி.எப் மையத்தில் இருந்து வெளியே வந்த யானை லட்சுமி நகர் பகுதியில் வந்திருக்கலாம் என வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இனி யானை அந்த பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News