அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்திற்கு முதல்-அமைச்சரின் பதில் என்ன? கோவையில் சீமான் கேள்வி
- அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும் அ.தி.மு.க. அது குறித்து எதிர்வினையாற்றி இருக்கிறது.
- தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி மட்டுமே எதிர்வினையாற்றி இருக்கிறார்.
கோவை.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும் பொழுது சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் மம்தாவை எதிர்ப்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும் மாறி மாறி வாக்கு செலுத்துவார்களா? மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவு எடுப்பது எப்படி சரியாக இருக்கும்.
பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அண்ணா தொடங்கிய கட்சியானது இதுவரை எதிர்வினையாற்றவில்லை. ஆனால் அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும் அ.தி.மு.க. அது குறித்து எதிர்வினையாற்றி இருக்கிறது. பா.ஜ.கவுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என குரல் கொடுத்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் இந்த செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி மட்டுமே எதிர்வினையாற்றி இருக்கிறார். இதில் முதல்வரின் கருத்து என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உதயநிதி, கருணாநிதி ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அண்ணா என்பதால் கண்டு கொள்ளவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை என்றாலும் அவரது கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், 2-ம் கட்ட தலைவர்கள் என அனைவரும் பேசுகிறார்கள்.
போரை பொறுத்தவரை மன்னன் எப்பொழுதுமே தளபதிகளை சண்டைக்கு அனுப்புவார். தோற்கும் பொழுது தான் அவர் களத்திற்கு வருவார். அது போல தான் தனது தளபதிகளை எடப்பாடியார் களத்திற்கு அனுப்பி இருக்கின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.