மேட்டுப்பாளையத்தில் மாயமான பள்ளி மாணவி கதி என்ன?
- சம்பவத்தன்று மாலை மாணவி, டியூசன் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
- மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை மாணவி, டியூசன் செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன்பின்னர் வெகுநேரமாகியும் திரும்ப வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அடுத்த காட்டூர் பகுதியில் மாணவி ஓட்டிச்சென்ற சைக்கிளும், நெல்லித்துறை சாலை ரெயில்வே கேட் அருகே உள்ள பவானியாற்று ெரயில்வே பாலத்தின் மேல் மாணவி அணிந்திருந்த துப்பட்டா மற்றும் காலணிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சைக்கிள், துப்பட்டா, காலணி ஆகியவற்றை மீட்டனர்.
தொடர்ந்து மாணவியை பவானியாற்றில் காட்டூர் ெரயில்வே கேட் முதல் கரட்டுமேடு வரை தேடி பார்த்தனர். ஆனால் நேற்று மாலை வரை தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை காவல்துறையினர் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாணவி காட்டூர் ெரயில்வே கேட் வழியாக டியூசன் செல்லும் பொழுது ஆற்றினை பார்க்க சென்றிருக்கலாம். அப்போது, தவறி ஆற்றில் விழுந்திருக்கலாமோ ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இன்றும் தேடும் பணி நடந்து வருகிறது என்றனர்.