உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று குடிநீர் வினியோகம் பாதிப்பு

Published On 2023-03-27 09:55 GMT   |   Update On 2023-03-27 09:55 GMT
  • பில்லூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
  • 2-வது நாளாக சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து கோவை மாநகருக்கு பில்லூர் குடிநீர் திட்டம் 1,2 ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பில்லூர் அணையில் இருந்து குழாய் வழியாக வரும் தண்ணீர் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து கோவை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படுகிறது. இதற்காக வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோவை வரை குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் நேற்று வெள்ளியங்காடு அருகே முத்துக்கல்லூர் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அதில் இருந்து வெளியேறிய பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக உடைப்பை சீர் செய்யும் பணி நடந்தது.

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள அறி க்கை யில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் 2-ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் பிரதான நீரேற்று குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

இதனால் பில்லூர் குடிநீர் திட்ட 2-ன் மூலம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரி பாளையம், ஆவாரம் பாளையம், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாப்புதூர், உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். எனவே மக்கள் சிரமத்தை பொறுத்து கோவை மாநகராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News