உள்ளூர் செய்திகள்

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்த காட்சி. அருகில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

பயிர் சாகுபடிக்காக வடக்கு பச்சையாறு அணையில் நீர் திறப்பு-2,028 ஏக்கர் பாசன வசதி பெறும்

Published On 2022-06-28 09:06 GMT   |   Update On 2022-06-28 09:27 GMT
  • வடக்கு பச்சையாறு அணையில் இருந்து மடத்தூர், ஏட்டு துரைசாமி, பழம்பத்து, பத்மநேரி கால், சம்பாகுளம், தேவநல்லூர் ஆகிய 6 அணைக்கட்டுகளில் தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.
  • அணையில் 21 அடி மட்டுமே நீர் இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி அணை திறக்கப்பட்டு உள்ளது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பத்தை கிராமத்தில் வடக்கு பச்சையாறு அமைந்துள்ளது.

நீர் திறப்பு

இந்த அணைக்கட்டு மூலமாக 115 குளங்கள் நிரம்பும். அதன் மூலம் 9592.91 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 21.25 அடி நீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில் பயிர் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று நாங்குநேரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் அரசு உத்தரவின்பேரில் சபாநாயகர் அப்பாவு இன்று காலை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

6 அணைக்கட்டுகள்

இதன் மூலம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள சுமார் 33 கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. அணையில் இருந்து இன்று முதல் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அணையை திறந்து வைத்தபின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து மடத்தூர், ஏட்டு துரைசாமி, பழம்பத்து, பத்மநேரி கால், சம்பாகுளம், தேவநல்லூர் ஆகிய 6 அணைக்கட்டுகளில் தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.

65 நாட்கள்

இதன் மூலம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள பத்தை, மஞ்சுவிளை, பத்மநேரி, மேலவடகரை, கீழ வடகரை, நெடுவிளை, இடையன்குளம் மற்றும் எருக்கலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2028.71 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஆயக்கட்டுகளுக்கு இன்று முதல் 65 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

அணையில் 21 அடி மட்டுமே நீர் இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி அணை திறக்கப்பட்டு உள்ளது. எனவே அதனை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், தாசில்தார் இசக்கிபாண்டி, உதவி பொறியாளர் பாஸ்கர், களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் விசுவாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News