முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது
- முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்ல ங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராசா அருண்மொழி முன்னிலை வகித்தார். விழாவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
முதல்-அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் எடுத்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. அதிலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளை சேர்க்க பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதற்கு சாட்சியாக தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்திற்கு விருதுகள் சேர்க்கும் வகையில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்க காரணகர்த்தாவாக திகழும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி மகிழ்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வருவாய்த்துறை அமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் எடுத்த முயற்சிக்கு எடுத்துக்காட்டாக பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த இதுவரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வரவேண்டும்.
பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற உறுதுணை யாக இருந்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உதவி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் பிரபாகரன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரமசிவன், பாலா, கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து, கிளை செயலாளர்கள் பரமசிவம், நடராஜன், சிவா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.