உள்ளூர் செய்திகள்

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் ஜெயசீலன் உள்ளார்.

சட்டபேரவை உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம்

Published On 2023-11-02 07:32 GMT   |   Update On 2023-11-02 07:32 GMT
  • விருதுநகரில் சட்டபேரவை உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
  • ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் அருள், ஜெயக்குமார், ரூபி.ஆர்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்து, சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்த உறுதி மொழிகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் தாமதமாகும் திட்டப்பணிகள் குறித்தும், அதனை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், ஆர்.ஆர்.நகர் சிமெண்ட் தொழிற்சாலை, சிவகாசி தீயணைப்பு நிலையம், ஆமத்தூர் ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

Tags:    

Similar News