அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
- அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் செய்தனர்.
- பின்னர் ஆசிரியர் தாமோதரன் கைது செய்யப்பட்டார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இங்கு புதுசூரங்குடி, நடுச்சூரங்குடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 268 பேர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் தாமோதரன் மாணவ, மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவதும் என தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை மாணவிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று ஆசிரியர் தாமோதரனை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன், காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆசிரியர் தாமோ தரன் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.