உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்-சுதாகர்ரெட்டி உறுதி

Published On 2023-06-24 13:32 IST   |   Update On 2023-06-24 13:32:00 IST
  • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஎன்று சுதாகர்ரெட்டி உறுதி கூறினார்.
  • மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விருதுநகர்

தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.

விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப் படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும் போது அவர் மீது மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணை கோரினார். ஆனால் தற்போது அதனை எதிர்க்கிறார். தி.மு.க.வில் சேர்ந்தால் ஊழல் மாயமாகி விடும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News