உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றத்தையொட்டி ஆடிப்பூர கொட்டகையில்ல கண்கவர் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-06-25 08:10 GMT   |   Update On 2022-06-25 08:10 GMT
  • ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று பெரிய தேரில் ஆண்டாளும், ரங்க மன்னாரும் காட்சியளிப்பார்கள்.

பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு சேர்ப்பார்கள் இந்த ஆண்டு ஆடித் தேர் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி நடைபெறுகிறது.

தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலுக்கு முன்புறம் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் மாலை தொடங்கி இரவு வரை பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களிப்பதற்காக 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆடிப்பூர கொட்டகையின் உள்ளே கண் கவரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியில் இரவு பகலாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணைக் கவரும் வண்ண துணிகள், பூக்களைக் கொண்டு பிரமாண்டமான முறையில் சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தலும், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்காக பெரிய மேடையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆடிப்பூர கொட்டகையில் தான் ஆண்டாள் தேர் திருவிழா கருட சேவையின் போது காலையில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.அதேபோல் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருப்பதி திருமலை, ஸ்ரீரங்கம், மதுரை அழகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து பட்டு, மாலை ஆகிய மரியாதைகள் கொண்டுவரப்பட்டு இந்த பந்தலின் கீழ் வைக்கப்பட்ட பின்னர்தான் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

அதேபோல் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கல்யாணம் இந்த கொட்டகையின் கீழ் நடைபெறும். சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர கொட்டகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணியை உள்ளூர் மட்டுமல்லாது கோவிலுக்கு வந்து செல்லும் வெளியூர் பக்தர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் கோவில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News