விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ள விதைகள், உரங்களை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
வேளாண்மை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- வேளாண்மை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தோட்டக்கலைத்துறையின் திட்டப்பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி வட்டாரத்தில் விஸ்வநத்தம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட காளாண் வளர்ப்பு குடிலையும், ஆனையூர் கிராமத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ள எலுமிச்சை மற்றும் கொய்யா மரக்கன்றுகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சிவகாசி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ள விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் மின்கல தெளிப்பான்கள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பயறு) திட்டத்தின் கீழ் மானியத்தில் உளுந்து விதைகளையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மின்கல தெளிப்பான் மற்றும் முழு மானியத்தில் நிலக்கடலை மினிகிட் ஆகியவற்றை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கள பணியாளர்களின் திட்ட பணிகளுக்கான இலக்குகள் மற்றும் சாதனை விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) நாச்சியாரம்மாள், தோட்ட கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.