உள்ளூர் செய்திகள்

பாலியல் குற்ற நிகழ்வை மறைத்து மாற்றி பதியப்படும் வழக்குகள்

Published On 2022-10-07 08:21 GMT   |   Update On 2022-10-07 08:21 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்ற நிகழ்வை மறைத்து வழக்குகள் மாற்றி பதியப்படுகின்றன.
  • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கின் விபரங்களை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்த 17 வயது பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பழகி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவகாசிக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

இந்த நிலையில் அந்த பெண்ணை கணவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதற்காக அவரது வீட்டிற்கு பலர் வந்து சென்றனர். அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை வீடியோக்கள் எடுத்து மிரட்டி அந்த தம்பதி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ராஜபா ளையத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம்போல் அந்த கும்பல் அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து அந்த நபரை மிரட்டி உள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாளையத்தை சேர்ந்த நபரை விபச்சார கும்பல் அரிவாளால் வெட்டியது.

படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திலும் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் உண்மை தன்மை குறித்து எப்.ஐ.ஆரில் பதிவு செய்யாமல் சாதாரண அடிதடி வழக்காக பதிவு செய்துள்ளனர். பாலியல் தொடர்பாக குற்ற நிகழ்வை மறைத்து போலீசார் சாதாரண வழக்காக பதிவு செய்வதால் இதுபோன்ற குற்றத்தை தடுக்க முடியாது.

எனவே வழக்கின் உண்மை தன்மையை சரியாக பதிவுசெய்ய போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News