மூதாட்டி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள்
மூதாட்டி சடலத்துடன் கிராமமக்கள் சாலை மறியல்- சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ளதாக புகார்
- மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
- கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.