உள்ளூர் செய்திகள்

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மணிகண்டன்

வேப்ப மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும் - காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ வேண்டுகோள்

Published On 2022-11-27 13:41 GMT   |   Update On 2022-11-27 13:41 GMT
  • காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய கருத்தரங்கு சாத்தூரில் இன்று நடைபெற்றது.
  • வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பார்க்கலாம் என்றார் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ.

சாத்தூர்:

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'லட்சங்களை கொட்டி தரும் மானாவாரி மரப் பயிர் சாகுபடி'என்ற தலைப்பிலான விவசாய கருத்தரங்கு சாத்தூரில் உள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிகழ்ச்சியில் பேசியதாவது:

33 சதவீதம் பசுமை பரப்பை அடைய வேண்டும் என்பது நம்முடைய இலக்காக உள்ளது. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு சுமார் 24 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 3.8 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. அதை அதிகரிக்க எங்களால் முடிந்த செயல்களை நாங்கள் செய்து வருகிறோம்.

என்னுடைய சட்டமன்ற தொகுதியில் 'வனத்திற்குள் விளாத்திக்குளம்'என்ற பெயரில் 5 ஆண்டுகளில் 1 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 25 லட்சம் பனை விதைகளையும் நட உள்ளோம்.

விவசாயிகள் ஆசைக்காக மரம் வைக்காமல், வாழ்விற்காக மரம் வைக்க வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மானாவாரி மாவட்டங்களில் நெல், வாழை போன்ற மரங்களை நட்டு சிரமப்படுவதற்கு பதிலாக வேப்பமரம், நாவல், பனை கொடுக்காப்புளி போன்ற மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அவை மானாவாரியில் நன்கு வளர்ந்து நல்ல வருமானமும் தரும்.

நம் நாட்டிற்கு ஒரு நம்மாழ்வார் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நம்மாழ்வாராக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுராம் பேசுகையில், "விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக, கிராமங்களில் ஒரு வேப்பமரம் இருக்கும். அது எவ்வித பராமரிப்பும் இன்றி தானாக நன்றாக வளர்ந்து இருக்கும். அதேசமயம், ஏக்கர் கணக்கில் வேப்ப மரங்களை நாம் வளர்க்க விரும்பினால், நாம் எதிர்பார்ப்பதை போல் தானாக வளர்ந்துவிடாது. அதற்கென்று சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இக்கருத்தரங்கின் வல்லுநர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். மரம் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது. எனவே, இந்த தொகுதியில் மரம் வளர்க்கும் பணியில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

குறிப்பாக, ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் ராமமூர்த்தி வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் 'கொடுக்காப்புளி'மர வளர்ப்பு குறித்தும் பேசினர். பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராஜன் சந்தன மர வளர்ப்பு குறித்தும், செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி இலுப்பை மர வளர்ப்பு குறித்தும் பேசினர்.

காவேரி கூக்குரல் இயக்கமானது மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வியக்கம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் இதுவரை சுமார் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ரூ.3-க்கு விநியோகம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News