13 வயதில் கைவரிசையை தொடங்கி 19 வயதில் வழிப்பறி கொள்ளை கும்பல் தலைவனான விஜய் - பரபரப்பு தகவல்
- புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான்.
- போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.
புதுச்சேரி:
கடலூரில் 2 போலீஸ் காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கொள்ளையன் விஜய் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் என்ற மொட்டை விஜய் (வயது 19) புதுவை திலாசுபேட்டை வீமன் நகர் ஓடை வீதியை சேர்ந்தவ ராவார். விஜய் 7-ம் வகுப்பு படிப்பை முடிக்கவில்லை.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே 13 வயது முதல் விஜய் ஆங்காங்கே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 15 வயது முதல் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட தொடங்கினான். மோட்டார் சைக்கிள், நகை, லேப்-டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி அவற்றை விற்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தான்.
மேலும் புதுவையை சேர்ந்த ரேவந்த், அசோக் அன்பரசன் அகியோரை தனது கூட்டாளியாக்கிக் கொண்டு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வந்தான்.
விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது புதுவை கோரிமேடு, மங்களம் உருளையான்பேட்டை, மேட்டுப்பாளையம், பாகூர், வில்லியனூர், தவளக் குப்பம், சேதராப்பட்டு, அரியாங்குப்பம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருந்தாலும் திருடுவதை விடவில்லை. இதனால் புதுவை போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக விஜய் இருந்து வந்தான்.
இதனால் புதுவையில் கைவரிசை காட்டினால் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தமிழக பகுதிக்கு இடம் பெயர்ந்தான்.
புதுவையையொட்டிய தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தன்னுடைய கும்லுடன் கைவரிசையை காட்டத் தொடங்கினான். இதனால் தமிழகத்தின் ஆரோவில், கோட்டகுப்பம், கிளியனூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் விஜய் மீது வழக்குகள் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் எம்.புதூரில் பதுங்கியிருந்த விஜயை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.