உள்ளூர் செய்திகள்

செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

Published On 2023-06-17 08:05 GMT   |   Update On 2023-06-17 08:05 GMT
  • அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
  • வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நடுவர் மனோகரன் தீர்ப்பினை வாசித்தார்.

விழுப்புரம்:

செஞ்சி அருகே விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செஞ்சியை அடுத்த ஊரணி்த்தாங்கலை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுந்தரவடிவேல் விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர்கள் சின்னகுழந்தை மகன் அருணகிரி (வயது 43). சாமிக்கண்ணு மகன் பாலச்சந்திரன் (53). இவர்கள் சுந்தரவடிவேலுவின் அண்ணன் அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2013-ம் வருடம் நவம்பர் 11-ந்தேதி அருணகிரியும், பாலச்சந்திரனும் சேர்ந்து சுந்தரவடிவேலை ஆபாச மாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த சுந்தரவடிவேல் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக சக்திவேல் ஆஜரானார். அனைத்து கட்ட விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நடுவர் மனோகரன் தீர்ப்பினை வாசித்தார். இந்த வழக்கில் அருணகிரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும், பாலச்சந்திரனுக்கு 2 பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பினால் செஞ்சி நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News