உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு துணிகர கொள்ளை

Published On 2022-06-26 09:42 GMT   |   Update On 2022-06-26 09:42 GMT
  • கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தப்பிய கொள்ளையர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
  • வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.

சூலூர்:

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி வசந்தம் நகரில் வசிப்பவர் ராதா (59). இவர் தனது மகள் நிர்மலா மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார்.

நேற்று நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பேத்தியும் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் மர்ம நபர்கள் ராதாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ராதாவை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்தனர். பின்னர் வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.

மதியம் பள்ளி முடித்து விட்டு வந்த ராதாவின் பேத்தி வீடு வெளியே பூட்டி இருப்பதையும், ஜன்னல் திறந்து உள்ளதையும் பார்த்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது பாட்டி ராதா கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

அவர்கள் விரைந்து வந்து முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு வீடு முழுவதும் சமையல் கியாஸ் பரவி இருந்தது. கொள்ளையடித்த நபர்கள் ராதாவை கட்டிப்போட்டதுடன், சமையல் கியாஸ் சிலிண்டரையும் திறந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. உடனடியாக ராதாவை மீட்ட பொதுமக்கள், வீட்டுக்குள் பரவி இருந்த சமையல் கியாசையும் வெளியேற்றினர். சிறு தீப்பொறி பறந்திருந்தால் கூட பெரும் சேதம் நிகழ்ந்து இருக்கும்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News