உள்ளூர் செய்திகள்

கலெக்டர் குமார் வேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்த காட்சி

காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேண்டும்

Published On 2023-04-28 15:19 IST   |   Update On 2023-04-28 15:19:00 IST
  • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
  • கடன் வழங்குவதில் முறைகேடு

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட வன அலுவலர் கலாநிதி உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு மாடு வைத்திருப்பவர்களுக்கு கூட முறைகேடாக கடன் வழங்குகின்றனர். விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கின்றனர்.

முறைகேடா கடன் வழங்கியது நிரூபித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா பள்ளிகொண்டாவில் உள்ள 5 கிராமங்கள் மற்றும் கே வி குப்பம் தாலுக்காவில் உள்ள 15 கிராமங்களை பிரித்து பள்ளிகொண்டாவை தனி தாலுகா அமைத்து தர வேண்டும்.

சொட்டுநீர் பாசன உதிரி பாகங்கள் பெறுவதற்காக கேஜிஎப் அல்லது சித்தூர் செல்ல வேண்டி உள்ளதால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சொட்டு நீர் பாசன உதிரி பாகங்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தர வேண்டும். பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் கசகசா வேலூர் மாவட்டத்தில் பயிரிட அனுமதி உள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும். அனுமதி இல்லையெனில் அனுமதி பெற்று தர வேண்டும்.

இயற்கை முறையில் விவசாயம் செய்த போது அரசு பசுமை புரட்சி என்ற பெயரில் ரசாயன விவசாயம் செய்ய வற்புறுத்தியது. ஆனால் தற்போது அரசு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.

கோடை காலங்களில் யானைகளுக்கு உணவு கிடைக்காமல் வயல்வெளிகளில் புகுந்து விடுகின்றன. இதனை தடுக்க விவசாயிகளிடமிருந்து சோகையுடன் கரும்பை கொள்முதல் செய்து யானை வரும் பாதைகளில் போடுவதால் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க முடியும்.

காட்பாடி தாலுக்கா அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது மேலும் தரமற்ற கோதுமைகளை வழங்குகின்றனர்.

சென்னை பெங்களூர் விரைவு சாலை அமைக்க 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது அதற்கு உண்டான இழப்பீடு இதுவரை வழங்கவில்லை அதனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் முருங்கை க்கீரையில் இருந்து பவுடர் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் விவசாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கிறது.

அதிகாரிகள் அந்த தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு வேலூர் மாவட்டத்தில் இதனை செயல்படுத்த முடியுமா இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்குமா என ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News