உள்ளூர் செய்திகள்

வேலூர் ஆவின் பால் சப்ளை பாதிப்புக்கு காரணம் யார்?

Published On 2022-09-03 15:43 IST   |   Update On 2022-09-03 15:43:00 IST
  • தி‌.மு‌.க. அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மோதல்-பரபரப்பு
  • குழந்தைகள் உயிரோடு விளையாடாதீர்கள்.. நிர்வாக திறமையை மறைக்காதீர்கள்... என கோஷம்

வேலூர், செப்.3-

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் நிறுவனத்தில் இருந்து கடந்த சில நாட்களாக பால் சப்ளை தாமதமாக செல்கிறது. ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வராததால் பால் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பால் முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளுக்கு ஆவின் பால் சப்ளை தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆவின் பால் சப்ளை தொடர்பாக வேலூர் மாவட்ட தி.மு.க, அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் வேலூர் மாவட்ட குழந்தைகளின் உயிரோடு விளையாடிய அ.தி.மு.க. முன்னாள் ஆவின் சேர்மனை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் வேலூர், குடியாத்தம், ஆற்காடு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளின் ஆவின் பால் வினியோகம் தடைப்பட்டதாக பொது மக்களிடமிருந்து புகார் வந்தது இதற்கான முழு காரணம் கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுகவும் அதற்கு சேர்மனாக இருந்தவரும்தான்.

வேலூர் பால் பண்ணையில் 125 க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வந்தார்கள், இந்த ஒப்பந்த ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்வர்கள்.

அதிமுக ஆதரவு ஊழியர்கள் சுமார் 35 பேர் விநாயகர் சதுர்த்தியன்று வேலைக்கு வர வில்லை, அவர்கள் தான் இரவில் பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்பவர்கள் அவர்கள் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி அன்று இரவு வராத காரணத்தினால் இரவில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்ய வேண்டிய இடத்தில் சுமார் 35 ஆயிரம் பால் பாக்கெட்டுக்கள் மட்டுமே பேக் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்று கூறி உள்ளனர்.

இதற்கு பதிலளித்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

நிர்வாக திறமையற்ற அரசின் செயல்படாத, மெத்தனப் போக்கான அதிகாரிகளின் செயலை கண்டிக்க இயலாமலும், பால் சப்ளை கிடைக்கவில்லை என்ற மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை மூடிமறைக்கவே, அ.தி.மு.க. ஆலின் சேர்மன் மீது தேவையற்ற, உண்மைக்கு புறம்பாக செய்தியை பரப்ப வேண்டும் என்ற நோக்கோடு தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணி ஒரு வெத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு 15 மாதங்களாக வேலூர் ஆவினில் நிர்வாக குழு கூட்டமோ அல்லது பொதுக்குழு கூட்டமோ நடத்தப்படவில்லை.

வேலூர் மாவட்ட ஆவின் அதிகாரிகளே, நிர்வாகத்தை துறை சார்ந்த அமைச்சரின் கட்டுப்பாட்டில் நேரடியாக, நடத்தி வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் மேற்பார்வையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள், முன்னாள் சேர்மன் சொல்லிக்கொடுத்து இரவுப் பணிக்கு வராமல் நின்று விட்டார்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

பணிக்கு வராமல் போன ஒப்பந்த ஊழியர்களை கண்காணித்து, வேலை வாங்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் விசித்திரமாக உள்ளது.தங்கள் நிர்வாக சீர்கேட்டை மறைத்து, இயலாமையை மூடிமறைக்க தேவையற்ற விஷம பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த மோதல் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News