வேலூர் மாநகராட்சி கடைகள் ஏலம் விடுவதை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் இன்று மாநகராட்சி மேயர் சுஜாதாவிடம் மனு அளிக்க வந்தனர்.
மாநகராட்சி கடைகள் ஏலம் விடுவதை நிறுத்த கோரி மேயரிடம் வியாபாரிகள் மனு
- 3 இடங்களில் உள்ள 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
- மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் வியாபாரிகள் இன்று மேயர் சுஜாதாவிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் அண்ணா சாலையில் பழைய மாநகராட்சி எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான ஏ கே எம் சி வணிக வளாகம் உள்ளது. இதேபோல வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்பென்ட்ரி ரோடு பகுதியில் மாநகராட்சி சொந்தமான கடைகள் உள்ளன.
இதில் வாடகைக்கு உள்ள வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்த வில்லை இதனால் அடுத்து இந்த 3 இடங்களில் உள்ள 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் இந்த கடைகளுக்கு வருகிற 28-ந் தேதி ஏலம் நடைபெறும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடைகள் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மாநகராட்சி இந்த கடைகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டும்.
கடைகள் ஏலம்விடப்படுவதன் மூலம் வியாபாரிகள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும். மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.