தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெற்ற கேரள அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கோப்பையை அமலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.
கபடி போட்டியில் கேரள அணி கோப்பை வென்றது
- தென்னிந்திய அளவிலான போட்டி குடியாத்தத்தில் நடந்தது
- பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் அணி முதலிடம் பெற்றது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது.
இந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச் சிறந்த 44 கபடி அணிகள் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 28 சிறந்த அணிகள் என மொத்தம் 72 அணிகள் பங்கேற்றன. 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் இந்த கபடி அணிகளில் புரோ கபடி லீக்கில் விளையாடிய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
இந்த தென்னிந்திய கபடி போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
நேற்று காலையில் பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்ஏ. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமலு விஜயன் எம்.எல்ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா காசர்கோடு ஜேகே அகடமி, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகமும் மோதின பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா ஜேகே அகடமி அணி வெற்றி பெற்றது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்றது பெங்களூர் மதராஸ் என்ஜினீயரிங் குரூப்ஸ் ராணுவ அணியும் அளந்தகரை ஏ டூ இசட் அணியும் கூட்டாக 3-ம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணி முதல் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் இரண்டாம் இடமும், மூன்றாம் இடம் கூட்டாக நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளம்பும் சென்னை சிட்டி போலீஸ் அணியும் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு குடியாத்தம் ஒன்றிய குழு துணை தலைவரும் ஊர் பெரிய தனக்காரமான அருண்முரளி தலைமை தாங்கினார்.ஊர் கவுண்டர் ராமன், தர்மகர்த்தா ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு, பார்த்திபன், சுரேஷ்குமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற கேரளா ஜிகே அகாடமி அணிக்கு ஒரு லட்ச ரூபாயும் கோப்பையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிக்கு கோப்பையும் 75 ஆயிரம் வழங்கினார்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அந்தியூர் சக்தி பிரதர் அணிக்கு 30 ஆயிரம் கோப்பையும் வழங்கினார்கள். மற்றும் கலந்து கொண்ட பரிசு பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனம், திமுக ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி, வேலூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் பூஞ்சோலை சீனிவாசன், சீவூர்சேட்டு, ஞானசேகரன்உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கபடி கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர். தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளை காண சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.