பெண் சாமியாடியதை வீடியோ எடுத்த வாலிபருக்கு அடி-உதை
- இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பி.டி.சி. ரோடு வாணி தெருவைச் சேர்ந்த சிவாஜி மகன் வினோத்குமார். இவர் தனது மாமியார் ஊரான திருவலம் இ.பி கூட்ரோட்டில் நடந்த திருவிழாவை காண சென்றார்.
சாமி வழிபாடு செய்த பொழுது அவரது மாமியார் சாமி வந்து ஆடினார். வினோத்குமார் அதை வீடியோ எடுத்த பொழுது திருவலம் இ.பி கூட்ரோட்டுச் சேர்ந்த சரவணன் என்கிற சரவண வேல் என்பவர் இங்கு பெண்களை வீடியோ எடுக்க கூடாது என்று கூறினார்.
வினோத்குமார் எனது மாமியாரை தான் நான் வீடியோ எடுக்கிறேன். உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதில் சரவணன் வினோத்தை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினோத்குமார் சரவணன் வீட்டுக்கு சென்று என்னை ஏன் திட்டினாய் என்று கேட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சரவணன், வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கையாளும் இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். அங்கிருந்து தப்பி சென்ற வினோத் குமார் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
சரவணன் மீது ஏற்கனவே வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி கொலை முயற்சி கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.