உள்ளூர் செய்திகள்

பெங்களூரில் 18 இடங்களில் திருடிய வாலிபர் கைது

Published On 2023-04-07 15:14 IST   |   Update On 2023-04-07 15:14:00 IST
  • வேலூர் ஆஸ்பத்திரியில் போலீசார் சுற்றிவளைப்பு
  • உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

வேலூர்:

பேரணாம்பட்டு அடுத்த நரியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விபத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக சகோதரர் ரமேஷ் (32) என்பவர் நேற்று காலை சென்றுள்ளார். அந்த நேரத்தில் மர்ம கும்பல் 2 பேர் ரமேஷை திடீரென சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதைப் பார்த்த ரமேஷின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அவர்களின் பிடியில் இருந்து ரமேஷை விடுவிக்க முயன்றனர்.

இதனால், அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் திரண்டதுடன் பதற்ற மான சூழல் நிலவியது. அப்போது, ரமேஷை சுற்றி வளைத்த மர்ம கும்பல் தங்களை கர்நாடக மாநில காவல் துறையினர் என கூறினர்.

அப்போதும், அவர்களின் பிடியில் இருந்து ரமேஷை விடுவிக்க உறவினர்கள் முயன்றனர்.

இந்த தகவலறிந்த தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், ரமேஷை சுற்றி வளைத்தவர்கள் கர்நாடக மாநிலம் மடிவாளா போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் ஜனார்த்தனன், நாராயணன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரமேஷின் உறவினர்களை எச்சரித்த போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பினர்.

பின்னர், பாகாயம் போலீஸ் நிலையத்தில் வைத்து கர்நாடக மாநில ேபாலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ் மீது மடிவாளா போலீஸ் நிலையத்தில் மட்டும் 18 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பிற போலீஸ் நிலையங்களிலும் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்குகளில் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையை காண்பித்தனர். அதன் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்த பிறகு மடிவாளா போலீசாருடன் ரமேசை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News