உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Published On 2023-10-18 09:25 GMT   |   Update On 2023-10-18 09:26 GMT
  • 1000 பேர் பங்கேற்பு
  • பணிகள் பாதிப்பு

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களிலும் 1200 பெண் பணியாளர்களும் 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த பணியா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்காமல் பழையபடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் நேற்று முன்தினம் வரை அவகாசம் கேட்டனனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

இதனால் ஒப்பந்த பணியாளர்கள் பகுஜன் சமாஜ் ஒப்பந்த பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் இன்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ பிஎப் அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இ.எஸ்.ஐ.பி.எப். தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூலியை உயர்த்து வழங்க விட்டால் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News