உள்ளூர் செய்திகள்

ஊதிய உயர்வு கேட்டு இல்லம்தேடி மருத்துவ ஊழியர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-09-05 15:27 IST   |   Update On 2022-09-05 15:27:00 IST
  • பெண் துப்புரவு பணியாளர் ஊதிய முறைகேடு புகார்
  • 14 அம்ச கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் இன்று நடந்தது.

இதில் வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளைக் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

காட்பாடி அடுத்த மேல் வழி துணையாங் குப்பம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் பூமணி (வயது 58) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

நான் பல ஆண்டுகளாக எம்.வி.குப்பம் பஞ்சாயத்தில் துப்புர பணியாளராக பணியாற்றி வருகிறேன்.

எனக்கு மாத ஊதியமாக ரூ.2200 வழங்கப்பட்டு வருகிறது ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு அரசாணையில் துப்புரவு பணியாளருக்கு 5310 வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இது குறித்து நான் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இல்லம் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அளித்த மனுவில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு பேறுகால சலுகைகள் வழங்க வேண்டும்.

முறையாக வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.

Tags:    

Similar News