காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.
பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
- குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தல்
- போக்குவரத்து பாதிப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு ஊராட்சி கல்லாபாறை கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அன்றாட பயன்படுத்தும் குடிநீருக்காக ஆங்காங்கே இருக்கும் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஒருமாத காலமாக குடிநீர் இல்லை எனவும், குடிநீரை சீராக வழங்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை 7 மணிக்கு கொட்டும் பணியிலும் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் ஓரிரு நாட்களில் சரிசெய்து தருவதாக கூறி உறுதி அளித்த பின்னர் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.