உள்ளூர் செய்திகள்

வேலூர் மண்டலத்தில் கோவில்களில் ஏழைகளுக்கு இலவச திருமண திட்டம் தொடக்கம்

Published On 2023-02-23 10:04 GMT   |   Update On 2023-02-23 10:04 GMT
  • முதல் நாளில் 14 ஜோடிகளுக்கு திருமணம்
  • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன

வேலூர்:

இந்து சமய அறநிலைய த்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் கோவில்களில் திருமணம் செய்யும் ஜோடிகள், முன்கூட்டியே விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தி அடைந்து இருக்கவேண்டும். அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் வாங்கி வரவேண்டும்.

அந்த விண்ணப்பத்தை கோவில் அதிகாரிகள் சரிபார்த்து கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்படும்.

இவ்வாறு கோவில்களில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு அங்ேகயே பதிவு திருமணசான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழில் மணமகன், மணமகள் கையொப்பமிட வேண்டும். மணமகன், மணமகள் உறவினர்கள் இரண்டு பேர் சாட்சி கையொப்பமிட வேண்டும். இதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கான முழு ஏற்பாடுகளை செய்ய ஒரு ஜோடிக்கு ரூ.50 ஆயிரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமாங்கல்யம் 2 கிராம் தங்கத்திற்கு ரூ.10 ஆயிரம், மணமகன் ஆடைக்கு ரூ.1000, மணமகள் ஆடை ரூ.2 ஆயிரம், மணமகன், மணமகள் வீட்டார் 20 பேருக்கு திருமண விருந்து ரூ.2 ஆயிரம், பூ மாலைகள் ரூ.1000, பாத்திரங்கள் ரூ.3 ஆயிரம், இரவு செலவு ரூ.1000 சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரமாகும்.

வேலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவச திருமணம் செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவில், வெட்டுவானம் எல்லையம்மன் கோவில், குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில்களில் இன்று முதல் கட்டமாக ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் முதல் நாளான இன்று 14 ஜோடிகளுக்கு கோவில்களில் இலவச திருமணம் நடைபெற்றது.

இந்த இலவச திருமணம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் எனஅதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News