வேலூர் ஜெயிலில் 35 கைதிகளுக்கு பரோல்
- பொங்கல் பண்டிகைக்கு செல்ல ஏற்பாடு
- 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜெயிலுக்கு திரும்ப உத்தரவு
வேலூர்:
வேலூர் ஜெயிலில் 500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பரோல் வழங்கப்படுகிறது. இதற்காக கைதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு, எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் கைதி செல்ல விரும்பும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள கைதிகள் தங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 35 கைதிகள் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வீடுகளுக்கு செல்கின்றனர். இந்த பரோல் 6 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஜெயிலுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.