வேலூரில் மேலும் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி
- இதுவரை 58 பேர் பாதிப்பு
- கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் நல்ல நீரில் வளரக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் நேற்று 2 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி உள்ளதா என சுகாதார அலுவலர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதற்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதத்தில் வேலூரில் 6 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 58 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதில் 58 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.