உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே வள்ளி கும்மி நடனம்

Published On 2023-10-03 13:29 IST   |   Update On 2023-10-03 13:29:00 IST
  • 3 வயது முதல் 65 வயது வரையிலான 48 நபர்கள் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.
  • பாரம்பரிய கலைகளை கற்பதால் மன அழுத்தம் குறைகிறது என மாணவ-மாணவிகள் கருத்து.

 கருமத்தம்பட்டி,

தமிழரின் பாரம்பரியக்கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது.

அழிந்துவரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழு கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளது.

இதையொட்டி சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் கருமத்தம்பட்டி அடுத்த சோளக்காட்டு பாளையம் ஆதிவிநாயகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 48 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர். நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் கனகராஜ் கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.

நாட்டு புறகலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து 6 மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருவாக்கி வருகிறோம் என்றார்.

நடனமாடிய பெண்கள், மாணவ-மாணவிகள் கூறும் போது இது போன்ற பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் உள்ளது எனவும் அனைத்து தரப்பு மக்களும் இதனை கற்றுக் கொள்ள வேண்டும், இது எங்களுக்கு ஊக்கப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். 

Tags:    

Similar News