உள்ளூர் செய்திகள்

கூடுதல் மகசூலுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்

Published On 2023-04-18 14:56 IST   |   Update On 2023-04-18 14:56:00 IST
  • மரபு தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும்.
  • சான்று பெற்ற விதைக் கொள்கலன்களில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என 2 அட்டைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயத்தின் தொடக்கம் விதை. அவ்விதையானது விதைச் சான்றளிப்புத் துறை மூலம் சான்று செய்யப்பட்ட விதையாக இருப்பின், அது மரபு தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும்.

சான்று பெற்ற விதைக் கொள்கலன்களில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என 2 அட்டைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

சான்றட்டையில் ரகம், நிலை, விதைச்சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதி நாள் மற்றும் அளவு போன்ற விதை விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

உற்பத்தியாளர் அட்டையில் விதை விபரம் மற்றும் பகுப்பாய்வு விபரங்கள் (புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம்) அச்சிடப்பட்டிருக்கும். அனைத்துப் பயிர்களுக்கும் தரமான சான்று விதையின் இனத்தூய்மை குறைந்தபட்சம் ஆதாரநிலை விதைக்கு 99 சதவீதம், சான்று நிலை விதைக்கு 98 சதவீதம் இருத்தல் அவசியம்.

அதே போன்று அனைத்து சான்று பெற்ற விதைகளின் புறத்தூய்மை குறைந்தபட்சம் 98 சதவீதம் இருத்தல் அவசியம். தரமான சான்று விதைகளின் ஈரப்பதம் தானிய வகைக்கு 10-13 சதவீதம், பயறு வகைக்கு 7-9 சதவீதம் எண்ணெய் வித்துப்பயிறுக்கு 6-9 சதவீதம் இருத்தல் அவசியம்.

தனியார் விதை உற்பத்தி நிலையங்களில் இருந்து விதைகளை வாங்கி பயன்படுத்தும்பொழுது விவசாயிகள் மேற்குறிப்பிட்ட விபரங்களை கவனித்து தரமான சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்தவும். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் சான்று விதைகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News