சுப.உதயகுமார்
கூடங்குளம் போராட்ட வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்- சுப.உதயகுமார் பேட்டி
- கூடங்குளம் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டி போராட்டங்களை நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஜூலை 12-ந் தேதி நெல்லையில் அனைத்துக் கட்சி மாநில தலைவர்களையும் அழைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றம்
நெல்லை:
கூடங்குளம் அணுஉலை பூங்கா-அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நெல்லை டவுனில் உள்ள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, புரட்சிக்கர இளைஞர் முன்னணி, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கூடங்குளம் அணுஉலை பூங்காவாக மாறுவதற்கு எதிராகவும், கூடங்குளம் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டியும் போராட்டங்களை நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூடங்குளம் அணுஉலை பூங்கா மற்றும் அணுக்கழிவுக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 27-ந் தேதி நெல்லை கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கூடங்குளம் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டி மனு அளிக்க உள்ளோம்.
ஜூலை 12-ந் தேதி நெல்லையில் அனைத்துக் கட்சி மாநில தலைவர்களையும் அழைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
முதல்-அமைச்சர், பிரதமரை சந்தித்த போது கூடங்குளம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.
இது மகிழ்ச்சியான விஷயம். இந்த நிலையை தொடர்ந்து தமிழக அரசு பின்பற்ற வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் பரப்புரை நிகழ்ச்சியும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை 26 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். மீதமுள்ள 63 வழக்குகளையும் வாபஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.