திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
- திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை கொண்டார்
- மருமகன் மீது மாமியார் புகார் அளிக்கபட்டுள்ளது
திருச்சி,
திருச்சி காட்டூர் ராஜேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் வினோத். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பூதரையநல்லூர் மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் மகாதேவி (வயது 25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் மற்றும் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.இதையடுத்து புதுமண தம்பதியினர் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
அதற்கு பரிசாக ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மகாதேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் மகாதேவி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மகாதேவியின் தாயார் நல்லதங்காள் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், மருமகன் சாய் வினோத் வரதட்சணை கேட்டு தனது மகளை துன்புறுத்தி வந்தார். மேலும் அவரை அடித்துள்ளார். இதனால் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். மகளின் சாவுக்கு காரணமான மருமகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.