உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடை பணிகள் மந்தமாக நடக்கிறது-ஒப்பந்தத்தை ரத்து செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Published On 2022-06-28 09:11 GMT   |   Update On 2022-06-28 09:11 GMT
  • பாதாள சாக்கடை பணிகள் மந்தமாக நடக்கிறது எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
  • மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது

திருச்சி:

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

லீலா வேலு (தி.மு.க): எனது 49-வது வார்டுக்கு உட்பட்ட ஹனிபா காலனி பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் வெள்ளம் வழிந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

முத்துச்செல்வம் (தி.மு.க.): எனது வார்டிலும் பாதாள சாக்கடை பணிகள் சீராக நடக்கவில்லை. பெரிய கம்பனி என்று சொல்கிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் மழை காலம் வந்து விடும். அப்போது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே இந்த காண்டிராக்டை ரத்து செய்ய வேண்டும்.

ராமதாஸ் (தி.மு.க.): என்னுடைய கல்யாண சுந்தரம் நகரில் மூன்று வருடங்களாக பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாமல் இருக்கிறது.

மேயர் அன்பழகன்: பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்த எல் அண்ட் டி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பணிகள் தொய்வாக நடக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.15 கோடி பின் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 247 கிலோ 147 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை மூன்றாவது கட்டப் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அந்த நிறுவனத்துக்கு கூறியிருக்கிறோம். உடனடியாக காண்டிராக்ட் கேன்சல் செய்தால் ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும்.

சுஜாதா (காங்கிரஸ்): நான் முதல் கூட்டத்திலேயே எனது வார்டில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாரம் ஒரு முறையாவது டாக்டர்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேயர்: தற்போது ஒரு டாக்டரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் நான்கு டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் முப்பத்தி ஆறு புதிய சுகாதார நிலையங்களை திறக்க போகின்றோம். அதற்கு சுகாதாரத் துறை மூலமாக டாக்டர், நர்சிங், உதவியாளர் நியமிக்கப்படுவார்கள்.

கவிதா செல்வம் (தி.மு.க.): எனது வார்டுக்கு உட்பட்ட ராக்போர்ட் பகுதியில் மக்களுக்கு பாதாள சாக்கடை மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பைப் லைன் போட முடியவில்லை. அங்கு இருக்கக்கூடிய 200 சதுர அடி நிலம் ராணுவத்துக்கு சொந்தமாக இருக்கிறது. அதனை கையகப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: அரிஸ்டோ மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவது போல இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன் (விடுதலை சிறுத்தை கட்சி): இரட்டை வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே கருத்தை கவுன்சிலர் மதிவாணனும் வலியுறுத்தினார்.

திமுக கவுன்சிலர் ஜெ. கலைச்செல்வி

எனது வார்டில் முன்பு 102 தூய்மை பணியாளர்கள் இருந்தார்கள். இப்போது 34 தூய்மை பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் அதிகம் குப்பைகள் தேங்கி விடுகிறது.

பைஸ் அகமது மனிதநேய மக்கள் கட்சி

எனது வார்டில் குடிநீர் குழாயும் கழிவுநீர் குழாயும் ஒரே மட்டத்தில் பதிக்கப்பட்டுள்ளது இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.இது பற்றி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

செந்தில்நாதன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்;-

திருச்சி மாநகராட்சி வரவு செலவு திட்டத்தை இதுவரை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவில்லை.

சுரேஷ்குமார் சிபிஐ  

மாநகராட்சி கூட்டத்தில் பிரதான அரசியல் கட்சி கவுன்சிலர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள். நாய் கருத்தடை மையங்களில் அரசு கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

Similar News