உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் மகப்பேறு வார்டில் அச்சத்துடன் கர்ப்பிணிகள்

Published On 2022-07-13 09:50 GMT   |   Update On 2022-07-13 09:50 GMT
  • அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் மகப்பேறு வார்டில் அச்சத்துடன் கர்ப்பிணிகள் உள்ளனர்
  • உணவு பொருட்களை கண்ட இடங்களில் வீசக்கூடாது

திருச்சி:

சமீபத்தில் தெலுங்கான மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை எலிகள் கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் ஜார்கண்ட் மாநிலத்திலும் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரின் கண்களில் எலி கடித்ததால் பார்வையிழக்கும் நிலை உருவானது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் உள்ள முதல் தளத்தில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் கணவர் கூறுகையில், என் மனைவியை பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் சேர்த்து இருக்கிறேன். இங்கு மிகவும் சுகாதாரம் இல்லாமல் வார்டுகள் இருக்கிறது. குறிப்பாக கழிப்பறைக்கு சென்றால் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

முக்கிய பிரச்சினையாக முதல் தளத்தில் உள்ள வார்டுகளில் எலிகள் அதிகமாக நடமாடுகிறது. திடீரென பொது மக்கள் அசந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளை கூட கடிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் எலிகள் மிகப்பெரிய அளவில் எடை கொண்டதாக இருப்பதால் அதை சமாளிப்பதற்கு பொது மக்கள் பெரும் சிரமம் அடைகிறார்கள்.

இரவு நேரத்தில் நோயாளிகள் தூங்கி கொண்டிருக்கும் போது அவர்கள் உண்பதற்காக வைத்திருக்கும் உணவு பொருட்களை எலிகள் சாப்பிடுவதற்காக சரளமாக வார்டிற்குள் நுழைகிறது. மேலும் இதுகுறித்து முதல் தளத்தில் இருக்கு அச்சப்பட்டு வேறு தளத்திற்கு தங்களை மாற்றுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் நோயாளிகள் முறையிடுகின்றனர்.

மேலும் நோயாளிகளுக்கு காலில் புண்கள் இருந்தால் அந்த ரத்த வாசனைக்கு எலிகள் வந்து காலை கடித்து விடுகின்றன. கழிப்பறைக்கு சென்றால் உள்ளே பெரிய அளவிலான எலிகள் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனால் மகப்பேறு வார்டில் முதல் தளத்தில் இருப்பதே ஒரு பெரும் சவாலாக உள்ளது. ஆகவே எலிகள் தொல்லையை ஒழிக்க திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், எலிகள் மருத்துவமனை வார்டிற்குள் வர காரணம் பொதுமக்கள் தான். என்னவென்றால் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு மீதமுள்ள உணவுகளை குப்பை தொட்டியில் போடாமல் கண்ட இடங்களில் வீசுகிறார்கள் இதனால் எலிகள் அதை சாப்பிடுவதற்காக வருகிறது.

மேலும் சுவர்களில் அதிக துளைளையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு கழிவுகளை குப்பை தொட்டியில் போடுங்கள். மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்துங்கள்.எலிகளை அழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News