ஊராட்சி வார்டு உறுப்பினர் விபத்தில் பலி
- திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் விபத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பலியானார்
- கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
டால்மியாபுரம்,
திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன்( வயது 58). இவர் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.மேலும் இவர் மேலரசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.
இவர் மேலரசூரில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கல்லக்குடி நோக்கி வந்தார். அப்போது லால்குடி ஒன்றியம் நெய்குப்பை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெயகுமார்(53), அவரது மகன் ஜெயநித்தீஸ் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தங்களது குலதெய்வம் பூமிபாலன் கோவிலுக்கு சாமி கும்பிட கல்லக்குடி தாண்டி மால்வாய் நோக்கி சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மொபட்டில் வந்த அர்ச்சுணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்ததகவலில் தகவல் அறிந்த அர்ச்சுணன் மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அர்ச்சுணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயேலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.