உள்ளூர் செய்திகள்

திருவெறும்பூர் அருகே - தனியார் நிறுவன மேலாளர் கொலையில் 3 பேர் கைது

Published On 2023-11-19 12:15 IST   |   Update On 2023-11-19 12:15:00 IST
  • இந்த நிலையில் சவுந்தரவல்லிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
  • சரவணன் கொலைக்கு பழிக்குப்பழியாக ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48) பெயிண்டர்.இவரது மனைவி சவுந்தரவல்லி (45) இவர் திருவெறும்பூர் எழில் நகர் பகுதியில் உள்ள டெக்கரேஷன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

அதே நிறுவனத்தில் லால்குடி பரமசிவபுரம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(53) மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சவுந்தரவல்லிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் சரவணனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ராதா கிருஷ்ணன் சரவணனுக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்தார். சரவணன் போதையில் மயங்கியதும் அவரை வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் ராதாகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பின்னர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி டாஸ்மாக் பாட்டில் மது அருந்தினார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த பிரவீன், சேதுபதி ஆகியோரும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன் தன்னை கீழக்குமரேசபுரத்தில் விடுமாறு கூறியுள்ளார். பின்னர் இருவரும் அவரை ஏற்றிக்கொண்டு திருவெறும்பூர் மன மகிழ் மன்றம் அருகே சென்றனர். அப்போது ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுபற்றி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிரவீன், சேதுபதி மற்றும் அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த மணி சர்மா ஆகியோர் சேர்ந்து ராதாகிருஷ்ணனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரவீன், சேதுபதி, கீர்த்திவாசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

சரவணன் கொலைக்கு பழிக்குப்பழியாக ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News