உள்ளூர் செய்திகள்

சர்ச்சைக்குள்ளான அரசு பள்ளியில் குழந்தைகள் நல அலுவலர்கள் அதிரடி விசாரணை

Published On 2022-09-27 07:20 GMT   |   Update On 2022-09-27 07:20 GMT
  • வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
  • மாணவிகளுக்கு பாலியல்-ஆசிரியை தற்கொலை

திருச்சி :

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சியிலுள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான புகார் எழுந்தது. அதன்பேரில் தமிழாசிரியர் மோகன்தாஸ் போக்சோ சட்டத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சம்மந்தப்பட்ட போக்சோ வழக்கில் அதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியை லில்லி, இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார்.

இதில் அதிக மன அழுத்தம் காரணமாகவும், சட்டரீதியாக எதிர்கொள்ள பயம் காரணமாகவும், தனது பெயருக்கு களங்கம் வந்ததன் விரக்தி காரணமாகவும், மண்ணச்சநல்லூரில் உள்ள தாயாரின் வீட்டிலிருந்த குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியை லில்லியின் உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப்பின் வழங்கிய பொழுது, லில்லியின் கணவர் குணசேகர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, லில்லியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டி, சாலை மறியல் செய்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, துறையூருக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

புகாரின் பேரில், பள்ளியில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் விசாரணை நடத்தினார். அன்று மாலை பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவினர், திருச்சி மாவட்ட கலெக்டரிடம் நேரில் சென்று, பள்ளியில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக அளித்தனர்.

திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் மோகன் தலைமையில் உறுப்பினர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆற்றுப்படுத்துனர் முதலான 8 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை முதல் மாலை வரை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பள்ளியில் தொடர்ந்த பரபரப்பு நிகழ்வுகள், புகார்களையொட்டி, நேற்று மாலை துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப்பேச்சு வார்த்தை நடைபெற்றது. முசிறி கோட்ட வருவாய் அலுவலர் மாதவன் தலைமையில், துறையூர் தாசில்தார் புஷ்பராணி, உதவி தாசில்தார் கோவிந்தராஜூ, முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதிவிவேகானந்தன் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எரகுடி வருவாய் ஆய்வாளர் நீலமேகம்,

பச்சபெருமாள்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன், பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகர், பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜூ, மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் அனைத்து தரப்பு மாணவர்களும் பள்ளியில் தொடர்ந்து பயில வேண்டும், அனைத்து மாணவர்களும் சீருடையில் மட்டுமே பள்ளிக்கு செல்ல வேண்டும், இதனை அனைத்து பெற்றோர்களும் உறுதி செய்திட வேண்டும், தங்கராஜ் என்பவர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். பள்ளி நிர்வாகத்தில் தலையிட கூடாது.

பெற்றோர்கள் தவிர மற்ற நபர்கள் யாரையும் பள்ளியில் அனுமதித்தல் கூடாது. இதனை பள்ளி நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும், பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப கூடாது என எவரும் தெரிவிக்க கூடாது, ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் பற்றி ஆசிரியர்கள் யாரும் பள்ளி மாணவர்களிடம் தெரிவிப்பதோ, விவாதிப்பதோ கூடாது. மீறினால் பள்ளி ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களிடம் சாதி, மதம் பற்றி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் யாரும் பேசுதல் கூடாது, பள்ளி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது குறித்து கல்வித்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இரு தரப்பினரும் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையிலும் ஈடுபட கூடாது. மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துறையூரில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வார்த்தையில் முசிறி மாவட்ட வருவாய் அலுவலர் மாதவன், முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன், துறையூர் தாசில்தார் புஷ்பராணி, துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்.

Tags:    

Similar News