உள்ளூர் செய்திகள்

பெல் நிறுவன ஊழியர் வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை

Published On 2023-10-19 12:35 IST   |   Update On 2023-10-19 12:38:00 IST
  • திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை
  • மோப்ப நாய் உதவியுடன் பெல் போலீசார் விசாரணை

திருவெறும்பூர்.

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சுற்றுலா சென்று விட்டார். நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு ஜெயசீலன் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த டாலர் செயின், 5 சிறிய மோதிரம், 5 ஜோடி தோடு, 2 மாட்டல், 2 தாலி காசு என சுமார் 6 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக ஜெயசீலன் பெல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து உடனடியாக கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மோப்ப நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. இச்சம்பவம் குறித்து பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News