தஞ்சையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும் போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
தஞ்சாவூர், ஜூன்.17-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், சங்கத்தின் கவுரவத் தலைவர் சுந்தரபாண்டியன், தலைவர் தங்கராசு துணைத் தலைவர்கள் மாணிக்கம் , சண்முகம் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இதில் 14- வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்குவதுடன், ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும், பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான தினசரி பயணப்படி பேட்டாவை அவ்வப்போதே வழங்கிட வேண்டும், வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆறு வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சங்க நிர்வாகிகள் ரங்கதுரை, சுகுமார், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், இளங்கோவன், ராஜமன்னன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் நன்றி கூறினர்.