உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமான சாலையில் கல்லைபோட்டு சீரமைத்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்- பொதுமக்கள் பாராட்டு

Published On 2023-06-12 15:04 IST   |   Update On 2023-06-12 15:04:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது.
  • சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன.

குறிப்பாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே பெரிய பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற முதியவர் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து சென்றார். இதனை கண்டதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக கற்களையும், மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை சீர் செய்தார்.

அவரே பள்ளத்தில் கற்களை கொட்டினார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் செயலை போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டினார்.

திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடை பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களை பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News