உள்ளூர் செய்திகள்

கோவை சொக்கம்புதூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி

Published On 2023-02-19 09:36 GMT   |   Update On 2023-02-19 09:36 GMT
  • பூசாரியின் ஆக்ரோச ஆட்டத்தை பார்த்து பக்தர்கள் ஆரவாரத்துடனும், பரவசத்துடனும் மாசாணியம்மனை வழிபட்டனர்.
  • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருக்கல்யாண வைபவம் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெறும்.

கோவை,

மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயானக் கொள்ளை நிகழ்வு நடைபெறும்.

அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுகாட்டிலும் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் மயானக் கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி சுடுகாட்டு மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்து. பின்னர் பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி மாசாணி அம்மனை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து மாசாணியம்மனின் இருதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி எடுத்து ஆக்ரோசமாக நடனமாடினார்.இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூசாரியின் ஆக்ரோச ஆட்டத்தை பார்த்து பக்தர்கள் ஆரவாரத்துடனும், பரவசத்துடனும் மாசாணியம்மனை வழிபட்டனர்.

பின்னர் மாசாணியம்மன் சிலையில் இருந்து மண் எடுத்து செல்லப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடத்தப்படும் மயானக் கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்டு வழிப்பட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருக்கல்யாண வைபவம் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெறும்.

Tags:    

Similar News