ஓசூர் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா வரவேற்பு
- கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குறிக்கும் வகையில் பள்ளி மைதானத்தில் 44 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஓசூர்,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் வழியாக வலம் வந்த ஒலிம்பியாட் ஜோதி, நேற்று தமிழகம் வந்தடைந்தது.
கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பளித்தனர்.
பின்னர் பள்ளியின் தடகள போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஜோதிகா, குதிரை மீது அமர்ந்து ஒலிம்பியாட் ஜோதியினை மாணவர்கள் காணும் வகையில் மைதானத்தில் வலம் வந்தார். அதனை தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குறிக்கும் வகையில் பள்ளி மைதானத்தில் 44 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.