உள்ளூர் செய்திகள்

போளூரில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் இரு சாமிகளும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

கண்ணமங்கலம், போளூர், கீழ்பென்னாத்தூர் பகுதியில் மயான கொள்ளை விழா

Published On 2023-02-20 09:35 GMT   |   Update On 2023-02-20 09:35 GMT
  • அம்மன் தேரில் பவனி
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது.

இதைமுன்னிட்டு ஆடும் கரக ஊர்வலம் நடைபெற்றது. இரவில் ஜோதி கரகம் ஊர்வலமும், நடைபெற்றது. காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மகிஷாஷீரமர்த்தினி அலங்காரத்தில் அங்காளம்மன் பூத கணங்கள் பிடாரி, பிடாரன், உடலில் எலுமிச்சை பழங்குத்தி கொக்கலிக்கட்டை ஆட்டத்துடன் ஆவேசமாக ஊர்வலமாக சென்று கண்ணமங்கலம் நாகநதி சந்தைமேட்டில் மயான கொள்ளை உற்சவம் நடைபெற்றது.

மேலும் அங்காளம்மனைக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் பக்தர்கள் பொங்கலிட்டு, குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தியும், கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர்.

இதேபோல் போளூரில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. போளூரில் அங்காளம்மன், மற்றும் பூங்காவனத்தம்மன் ஆகிய இரு சாமிகளும் வெவ்வேறு வழியாக திருவீதி உலா வந்தனர்.

அப்போது தெரு முழுவதும் உள்ள பொதுமக்கள் தீப ஆராதனை செய்து அம்மன் அருள் பெற்றனர். பிறகு பழைய பஸ் நிலையம் வந்தடைந்து. இரு சாமிகளும் மாலை மாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பிறகு 7 மணி அளவில் சுடுகாட்டை சென்றடைந்து மயான கொள்ளை விழா நடந்தது.

கீழ்பென்னாத்தூர் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்ஆலயத்தில் மாயன கொள்ளை விழா நடந்தது. இரவு மேளதாளம் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு, மதியம் 2 மணி அளவில் மயான கொள்ளை உற்சவ விழா நடைபெற்றது.

விழாவில் சாமி வேடம் அணிந்த பக்தர்கள் நடனம் ஆடிய வண்ணம் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை சாலை, குளக்கரைதெரு வழியாக கீழ்பென்னாத்தூர் மயான பகுதிக்கு சென்றது. அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். திருத்தேர் உற்சவம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது.

இதே போல், கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் என்கின்றஅங்காளம்மன் கோவிலில், மயான சூறை உற்சவ விழா நடந்தது.

Tags:    

Similar News