உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சஷ்டி விரதம் நிறைவு விழா

Published On 2022-10-31 15:32 IST   |   Update On 2022-10-31 15:32:00 IST
  • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
  • கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் சஷ்டி விரதம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், சஷ்டி விரதம் நிறைவையொட்டியும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சஷ்டி விரதம் நிறைவையொட்டி இக்கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. வழக்கமாக சஷ்டி விரதத்தன்று கம்பத்து இளையனார் சன்னதியை பக்தர்கள் 108 முறை வலம் வருவார்கள். அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் கம்பத்து இளையனார் சன்னதியை சுற்றி 108 முறை வலம் வந்தனர். மேலும் அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள வட வீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விரதம் இருந்த பக்தர்கள் காலை இருந்து கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ப்கதர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

Tags:    

Similar News