உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் காஷ்மீர் வாலிபர் கைது

Published On 2023-01-20 09:35 GMT   |   Update On 2023-01-20 09:35 GMT
  • ஆன்மிக சுற்றுலா வந்த பெண்களை கேலி, கிண்டல் செய்ததால் நடவடிக்கை
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதனை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வெளிநாட்டினர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மும்பையை சேர்ந்த மித்தேஷ் தக்கர் என்பவரின் மனைவி ரேபக்கா தக்கர் (வயது 40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளிநாட்டை (சுவிட்சர்லாந்து) சேர்ந்த 2 இளம்பெண்களுடன் ஆன்மிக சுற்றுலாவிற்காக திருவண்ணாமலைக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அறக்கட்டளை விடுதியில் தங்கினர். இதையடுத்து அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலையில் சேஷாத்திரி ஆசிரமத்தின் அருகில் அவர்கள் செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வெளி மாநில பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீர் பட்கம் பகுதியை சேர்ந்த அப்துல்ரஷித் என்பவரின் மகன் முபாஷிர் ரஷீத் (22) என்பவர் அவர்களை கேலி, கிண்டல் செய்து உள்ளார்.

இது குறித்து ரேபக்கா தக்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாஷிர் ரஷீத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News