உள்ளூர் செய்திகள்

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர், வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்

Published On 2022-09-20 14:52 IST   |   Update On 2022-09-20 14:52:00 IST
  • திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
  • ஓட்டுனர் உரிமம் இல்லாத 25 ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலை:

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உரிய ஆவணங்களுடன் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசாருடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆட்டோ டிரைவர்களிடம் ஒட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டறியப்பட்டு ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பஸ்களில் படிகளில் தொங்கியபடி சென்ற மாணவர்களை இறக்கி விட்டு அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நேற்று ஒரே நாளில் 18 வயதிக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டிய 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 40 கடைகளுக்கு சீல் அதேபோல் பைக்கில் 3 பேர் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இன்னும் ஒருமாதத்திற்கு தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

மேலும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் இல்லாத 25 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் சாலை விதிகளை பின்பற்றாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கை அதிகளவில் நடைபெறும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குட்கா விற்பனை செய்த 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News